கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
2வது டோஸ்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவ சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி மார்ச் 1ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக் கொண்டார். அதனைதொடர்ந்து 37 நாட்களுக்குப் பிறகு இன்று அவர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தினர்.
பிரதமர் அறிவுரை
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி; இன்று காலை இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தொற்றை தடுப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி உள்ளது. தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.