தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் 2-வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வதந்திகளை நம்பாதீர்
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஆனால் 2-வது அலை உருவாகவில்லை என்றும் கூறினார். பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே தெருவில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு ‘மைக்ரோ’ கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் எனவும் கடந்த ஆண்டு போல் தெருவை அடைக்காமல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் கிருமிநாசினி தெளித்து, அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்க உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வதந்தி பரவி வருவதாக குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.