சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றுகின்றன. நேற்று முன்தினம் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.785ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.25 உயர்த்தப்பட்டு, ரூ.810ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர் விலை இம்மாதம் மட்டும் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கடும் கண்டனம்
சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் அவர் பதிவிட்டுள்ளதாவது; கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.