சமையல் கேஸ் விலை உயர்வானது, மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விலை ஏற்றம்
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி சமையல் எரிவாயுவின் விலை ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.50 உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சென்னையில் தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடும் கண்டனம்
கேஸ் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும். இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.