அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விடுதலை
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் காலம் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த மாதம் 27-ந் தேதி விடுதலையானார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விடுதலைக்கு பின்னர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சசிகலா ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்து வந்தார்.
கொடி அகற்றம்
இந்நிலையில், சசிகலா இன்று தமிழகம் திரும்புகிறார். காரில் அதிமுக கொடியுடன் கர்நாடக – தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜூஜூவாடி பகுதி அருகே அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருந்த நிலையில், சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேறு ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்தார். அவருக்கு அமமுக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிகாரம் இல்லை
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றார். காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது வாகனத்தை மாற்றியதாகவும் அவர் விளக்கமளித்தார். அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும் எனவும் காவல்துறை நடுநிலையுடன் செயல்படாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். காவல்துறை நடுநிலை தவறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.