தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நமீதா தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. அதன்பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் நமீதாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. அதற்கு பின்னர் வெகு நாட்களாக அவரை திரையில் காணவில்லை.

மன அமைதி இல்லை

இந்த நிலையில், திடீரென தனது உடல் எடையை குறைத்த நமீதா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நமீதா கூறியிருப்பதாவது: ‘‘10 வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே பதிவிட்டுள்ளேன். உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக மன அழுத்தமும், அசவுகரியமும் ஏற்பட்டது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. தினமும் பீட்சா, பர்கர் போன்ற உணவை அதிகமாக சாப்பிட்டேன். எடையும் அதிகமாக கூடி எனது தோற்றமே மாறியது. இறுதியில் எடை 97 கிலோவாக இருந்தது.

ஆழ்ந்த தியானம்

சிலர் நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக பேசினர். ஆனால் சினைப்பை மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். எனக்கான மன அமைதி கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்தன. ஐந்தரை வருட மன அழுத்தத்துக்கு பிறகு இறுதியில் எனது கிருஷ்ணரையும், மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். நான் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லவில்லை. எனது தியானமும், கிருஷ்ணருக்காக செலவிட்ட நேரமும்தான் சிகிச்சையாக மாறியது. இறுதியில் அமைதியையும், அன்பையும் கண்டுபிடித்தேன். நீங்கள் வெளியில் தேடும் விஷயங்கள் உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் இதன் நீதி”. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here