பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 10,228 பேருந்துகளும், மற்ற ஊர்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக 17,18,19 ஆகிய தேதிகளில் 15,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலைய விவரங்கள்
- மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கு பேருந்து இயக்கம்.
- கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கம்.
- தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கம்.
- தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூருக்கு பேருந்துகள் இயக்கம்.
- பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரிக்கு பேருந்துகள் இயக்கம்.
- கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
முன்பதிவு மையம்
சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவிற்கு சென்னை கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லியில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.