பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிரட்டும் கொரோனா
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உறுதி செய்தார். இந்த புதிய வைரஸ், தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக் கூடியது. இதனால் நிலைமை கைமீறிப் போய்விட்டதாகவும், இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அங்கு ரத்து செய்யப்பட்டு வருகின்றன. புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த நாட்டுக்கான விமான சேவையை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, துருக்கி, கனடா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் விமான போக்குவரத்தை நேற்று ரத்து செய்தன.
சென்னை வந்தவருக்கு கொரோனா
இந்த நிலையில், விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றார். லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளதாகவும், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்த நபர் வீட்டு தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா உறுதியான நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கு பிறகே அது வீரியமிக்க கொரோனாவா? அல்லது வீரியமில்லாத கொரோனாவா? என்பது தெரியவரும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார்.