சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபரீத முடிவு
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தற்கொலை குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத, சித்ராவின் தாய் – தந்தை, ஹோட்டல் ஊழியர்கள், இறுதியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஹேம்நாத் மற்றும் சித்ராவுக்கு சொந்தமான செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியானது.
”சந்தேக நோய்”
இதன் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரின் அதிரடி விசாரணையின்போது ஹேம்நாத் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; சித்ராவும் – ஹேம்நாத்தும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தமும், பதிவு திருமணமும் செய்து கொண்டனர். அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் தனது சந்தேகப் பார்வையை திருப்பினார் ஹேம்நாத். அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
‘செத்து தொல’
சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பிற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி உள்ளனர். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஹேம்நாத் சித்ராவிடம், ‘நீ இருப்பதை காட்டிலும் இறப்பதே மேல், செத்து தொல’ என்று கூறிவிட்டு ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்பின்னரே சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே மன உளைச்சல் காரணமாக நடிகை சித்ரா ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.