தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை
கடந்த மாதம் அதிரடியாக சரிந்து வந்த தங்கம் விலை, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 5ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,652க்கும், ஒரு சவரன் ரூ.37,216க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. ஒரு சவரன் ரூ.128 குறைந்து 37,192க்கு விற்கப்பட்டது.
கிடுகிடு உயர்வு
இந்த நிலையில், வாரத்தின் 2ம் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,733க்கும், ஒரு சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.37,864க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.90 அதிகரித்து ரூ.69,50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்கம் விலை உயர்வு பொதுமக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இருப்பினும் தங்கம் வாங்க இது சரியான நேரம் என சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டு குரு சாந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தங்கத்தின் தேவை அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என்றார். வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் சாந்தகுமார் கூறினார்.