காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரசியல் பயணம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. அதன்பின் அரசியலில் நுழைந்த அவர் ‘தல்லி தெலங்கானா’ என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். அதன்பின் அதை கலைத்துவிட்டு 1998-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பாஜகவிலிருந்து விலகிய அவர், தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். ஆனால் விஜயசாந்திக்கும், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து விலகினார். பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த விஜயசாந்திக்கு, 2018-ம் ஆண்டு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கி அக்கட்சி கெளரவித்தது.

பாஜகவில் இணைந்தார்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகிய விஜயசாந்தி, இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்காக டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 2023-ல் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜயசாந்தி பாஜகவில் இணைந்தது அக்கட்சியின் பிரசாரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. சமீபத்தில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நிலையில், விஜயசாந்தியும் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here