அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம் என்பதால் கட்சி துவங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியல்
1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். அதன்பிறகு அரசியல் கட்சியைத் தொடங்காமல் இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி கருத்துகளைக் கேட்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது அவர்களது கருத்துகளைத் தெரிவித்தனர். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக தனது முடிவை அறிவிப்பேன்” எனக் கூறியிருந்தார்.
அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில், ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி அன்று வரும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல, Sign of the horns. வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அதிசயம்…அற்புதம்…நிகழும்!!!”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றம் நடக்கும்
இதனிடையே சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.