வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விட்டு விட்டு மழை
இதனிடையே, சென்னை நகரின் பல பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக் பில்லர், கே.கே. நகர், கோயம்பேடு, தி. நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு உள்ளிட்ட மாநகர்ப் பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, போரூர், பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.