இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டும் இன்று முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானோரும், இந்தியாவில் 79 லட்சத்துக்கு மேற்பட்டோரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 16 லட்சதுக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக, வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 1.10 லட்சத்தைக் கடந்தது. மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு, ஆந்திரா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
முதல் மரணம்
இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கொரோனா வைரஸுக்கு இன்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிசோரத்தில், முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நெதர்லாந்து சென்று வந்த 52 வயது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் குணமடைந்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநிலம் தீவிரம் காட்டியதன் பலனாக உயிரிழப்புகள் ஏதும் நிகழாமல் இருந்தன. ஆனால் இன்று கொரோனா பாதிப்பால், 62 வயது நபர் உயிரிழந்துள்ளார். 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததன் மூலம், கொரோனாவால் மிசோரம் மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.