புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் மியூசிக் சேனலில் ‘பிக் பாஸ்’ தொடர்பான புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
“விஜய் மியூசிக்”
ஸ்டார் விஜய் நிறுவனம் தனது பிரத்யேக இசை சேனலான விஜய் மியூசிக்கை கடந்த 4ம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 4 தொடக்க நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசன், 24 மணி நேர விஜய் மியூசிக் சேனலை தொடங்கி வைத்தார். அத்துடன் சேனலின் லோகோவையும், விளம்பரப் படத்தையும் அவர் வெளியிட்டார். அந்த விளம்பர படத்தில் இடம்பெற்றுள்ள அனிமேஷனால் உருவாக்கப்பட்ட ‘ஜிகிலு ஜிகிலு’ என்ற பாடல், சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிய தலைமுறை தமிழ் இசை ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள விஜய் மியூசிக் சேனல், தமிழ் இசை தளத்தில் புதிய சகாப்தத்தை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேயர்கள் தடையற்ற இசையை ரசிக்க ஏதுவாக விஜய் மியூசிக் சேனலில் அறிவிப்பாளர்களோ, வி.ஜெ.க்களோ இடம்பெறமாட்டார்கள் என்பது சிறப்பம்சமாகும்.
புதுப்புது நிகழ்ச்சிகள்!
விஜய் டிவியைப் போலவே விஜய் மியூசிக் சேனலும், புதிய திறமைகளை வளப்பதற்கான தளமாகவும், பார்வையாளர்களின் எண்ணங்களையும், இசை ஆர்வத்தையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மியூசிக்கில் ‘எங்க புலிங்கோலாம் பயங்கரம்’, ‘கண்ணா பாட்டு பாட ஆசையா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. பிக் பாஸ் சீசன் 4-ன் பிரத்யேகமான காணப்படாத காட்சிகளையும் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொழுதுபோக்கு அரட்டை நிகழ்ச்சியாக ‘பிக் பாஸ் வேற வெவல் ஃபன்’ என்ற புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ பற்றிய கலந்தாய்வு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.