தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் தண்டனைக் காலம் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தண்டனைக் காலத்திற்கு முன்பே அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
சசிகலா எதிர்ப்பு
இதனிடையே பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பெங்களூரு சிறை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும் தீர்ப்பின்படி ரூ.10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால், மேலும் 1 ஆண்டு சிறைவாசம் அனுபவிப்பார் எனவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தன்னைப் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்த நிலையில், சசிகலாவைப் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதம் ரிலீஸ்?
இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கைதிகளை பார்க்க முடியாத நிலை உள்ளதால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை என்றும் தங்களை பொறுத்தவரை இம்மாத இறுதியில் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுபற்றி சிறைத்துறையினர் இம்மாத இறுதியில் தகவல் கொடுப்பார்கள் என நம்புவதாகவும், சசிகலாவுக்கான அபராத தொகை ரூ.10 கோடியே உடனே செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.