திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்வச விழாவின் 2வது நாளான இன்று சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று மாலை மணி 6.03 முதல் 6.30 வரை மீன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. ஏழுமலையான் கோவில் தங்க கொடிமரத்தில் கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை அர்ச்சகர்கள் வேத மந்திர கோஷங்களுக்கு இடையே ஏற்றி வைத்தனர். அதனைதொடர்ந்து இரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவிலேயே பங்கேற்றனர்.
2ம் நாள் விழா
9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்வச விழாவின் 2வது நாளான இன்று, ஏழுமலையான் சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று இரவு அம்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருள்கிறார். வழக்கமாக பிரம்மோற்சவ விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து கிராமிய கலைஞர்கள் வந்து கோலாட்டம், மயில்லாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரம்மோற்சவத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற வில்லை.
அனுமதி இல்லை
பிரம்மோற்சவத்திற்கு நாள்தோறும் 12 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். குறிப்பாக ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம் டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும். மேலும், விஐபி பிரேக் தரிசனம், அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்களை பெற்ற பக்தர்களும் சுவாமியை தரிசிக்கலாம். வழக்கமாக புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். ஆனால், இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனின் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இலவச தரிசனத்தை தேவஸ்தானம் முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது.
ஜொலிக்கும் திருப்பதி
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அலிபிரி உள்ளிட்ட பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.