சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் OTTயில் வெளிவரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
OTT பிரச்சனை
கொரோனா பிரச்சனையால் கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸூக்கு வரிசை கட்டி நிற்கும் சூழலில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், காயத்ரி ரகுராமன் நடித்த டேனி, லாக்கப் போன்ற பல திரைப்படங்கள் OTTயில் வெளியானது. இதனை தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பின்பற்றத் தொடங்கியதால், தியேட்டர் அதிபர்கள் பலரும் செம கடுப்பில் உள்ளனர். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் அடங்குவதற்குள், சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமிற்கு விற்கப்பட்டு, அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. இது பூதாகரமாக வெடித்தது. சூர்யாவின் இந்த அதிரடி முடிவிற்கு பல தியேட்டர் அதிபர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
OTTயில் ‘டாக்டர்’?
OTT தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் ‘டாக்டர்’ திரைப்படமும் OTTயில் ரிலீசாக போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், இந்த செய்தி உண்மைதானா? அல்லது வதந்தியா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். கோலமாவு கோகிலா பட இயக்கிய நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னணி நட்சத்திரங்கள் பலர் OTT தளத்தை தேர்ந்தெடுத்தால், திரையரங்குகள் அனைத்தையும் கல்யாண மண்டபமாக மாற்றிவிடுவோம் என்று தியேட்டர் அதிபர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.