இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவிக்கு காமன் டிபி வெளியிட்டு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இளம் நாயகன்
‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரவிக்கு முதல் படத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும் ரவி என்று அழைக்காமல் ஜெயம் ரவி என்று அடைமொழியோடு அழைக்கவும் தொடங்கிவிட்டனர். பிரபல படத்தொகுப்பாளர் மோகனின் மகனும், இயக்குநர் ராஜாவின் தம்பியுமான ஜெயம் ரவி, குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். அதில், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் ஒன்று. ஜெயம் படத்தை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல வெற்றிப் படங்களையும் அவர் கொடுத்துள்ளார். எப்பொழுதும் காதல், ரொமான்ஸ் என்று நடித்து கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் திரைப்படம் பெரிய சவாலாக அமைந்தது. இப்படம் தமிழில் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, தெலுங்கிலும் ராம் சரண் நடிப்பில் ரீமேக் செய்தனர்.

பர்த்டே பாய்
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கவனம் செலுத்திய ஜெயம் ரவி நிமிர்ந்து நில், மிருதன், பூலோகம், வனமகன், டிக் டிக் டிக் போன்ற வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. காமெடி, காதல் என்று அனைத்தும் நிறைந்த இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ஈர்த்தது. தற்போது பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக சினிமா பிரபலங்களும், அவரது ரசிகர்களும் காமன் டிபி வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.