படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் இந்தியன் 2 படத்தில் தான் தொடர்பான காட்சிகளை விரைந்து எடுக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் கெடு விதித்துள்ளார்.
படப்பிடிப்பில் சிக்கல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனால், இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை எனக்கூறி படப்பிடிப்பை சில வாரங்கள் நிறுத்தினர். பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் படப்பிடிப்பு தொடங்கிய போது, கிரேன் விழுந்து படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் பலியான கோர விபத்து நடந்தது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.
அதிகரிக்கும் அழுத்தம்
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளை மீண்டும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதித்தது. இதனையடுத்து ஜனவரி மாதத்துக்குள் தன்னை வைத்து எடுக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென கமல்ஹாசன் திட்டவட்டமாக சொல்லியுள்ளாராம். ஏனென்றால் அதன்பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் முழுக்கவனம் செலுத்த உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும், இயக்குநர் ஷங்கருக்கு கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம்,
லைகா நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தாலும், அப்படங்கள் சரியான வரவேற்பு பெறாததால், கடும் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 படத்தை விரைந்து முடிக்க லைகா தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்படுவதாக தெரிகிறது. இரு புறங்களில் இருந்தும் வரும் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.