போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகினி திவேதி விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடிகை கைது
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மருந்துகள் பயன்படுத்தியதாக கூறி பிரபல நடிகை ராகினி திவேதியை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரான ரவிஷங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ராகினி திவேதி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் மீது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நடிகை சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகினியின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது போலீசார் தரப்பில் பல பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. விசாரணைக்கு ராகினி ஒத்துழைக்கவில்லை என்றும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி அவர் நாட்களை கடத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும் ஒவ்வொரு முறையும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விசாரணையை தவிர்க்கும் ராகினி, அவர் கலந்துகொண்ட பார்ட்டிகளைப் பற்றி கேட்டால் தனக்கு ஏதும் தெரியாது என்றும் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
தட்டிக்கழித்த ராகினி
ஒவ்வொரு முறையும் இப்படி பதில் சொன்னதால் ராகினியை மேலும் மேலும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகினி திவேதியை ஐந்து நாட்கள் காவலில் வைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை மற்றும் ஐதராபாத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பல பார்ட்டிகளில் ராகினி கலந்துகொண்டுள்ளதால், அந்த பார்ட்டிகளில் போதைப்பழக்கம் இருந்ததா என பல பிரபலங்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது.