கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு யார் போட்டியிடுவது என பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி எழுந்துள்ளது.
களமிறங்கும் காங்கிரஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச். வசந்தகுமார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்தது. அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முதலில் தொழிலுக்கே முக்கியத்துவம் எனக் கூறியுள்ள விஜய் வசந்த், அரசியலை பொறுத்தவரை கட்சியின் கருத்துக்கிணங்க நடக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
குறி வைக்கும் பாஜக
அதேசமயம், கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்ற பாஜக தரப்பிலும் வேலைகள் நடந்து வருகிறது. இடைத்தேர்தலில் களமிறங்க பொன். ராதாகிருஷ்ணனுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது. கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தால், இடைத்தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என நயினார் நாகேந்திரன் கூறியதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், அனுதாப அலை இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். 14.93 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கப் போவது யார்? வெற்றி வாகை சூடப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!