கன்னட திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக வெளியான தகவலையடுத்து நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலையாள திரையுலகினருக்கு போதை பொருள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரையுலகில் போதைப் பொருள்
திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. இந்த நிலையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் கன்னட மற்றும் மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது.
அதிரடி கைது
இந்நிலையில், கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரையுலகில் போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் குறித்த விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மேலும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்ற அவர், கன்னட திரையுலகில் யார், யார் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், பிரபல நடிகை ராஜினி திவேதியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர் ராகினியை கைது செய்தனர். மேலும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசாரின் அடுத்தடுத்த நடிவடிக்கைகள், திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நடிகர், நடிகை அதிர்ச்சி
இந்த நிலையில், மலையாள திரையுலகிலும் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதிகாரிகளின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியுள்ளது. இதுதொடர்பாக முன்னணி நடிகர், நடிகைகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.