சினிமாத்துறையில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக நடிகை கங்கனா ரனாவத் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து, அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பரபரப்பு குற்றச்சாட்டு
பாலிவுட்டில் கொக்கைன் போதைப் பொருள் அனைத்து வீட்டு விருந்துகளிலும் இருக்கும் என்றும் முதன்முதலில் பார்ட்டிக்கு செல்பவர்களுக்கு அது இலவசமாகவே தாராளமாக கொடுப்பார்கள் என்றும் பிரபல நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். நடிகர், நடிகைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தால் பலர் சிக்குவார்கள் என்றும் அவர் பகீர் தகவலை வெளியிட்டார். கங்கனா குற்றச்சாட்டின் எதிரொலியாக பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை செய்த அனிகா என்ற பெண்ணையும், அவருடன் தொடர்பில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து கிட்டத்தட்ட 145 MDMA வகை போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட 180 LSD வகை போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கலக்கத்தில் பிரபலங்கள்
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிகாவுக்கும், கன்னட சினிமாவில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், பல பார்ட்டிகளுக்கு அனிகா போதை மாத்திரைகளை விற்று உள்ளதாகவும், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற முன்னணி நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளையும் அவர் விற்று இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. சினிமா நடிகர், நடிகைகளுக்கு இதனை விற்பனை செய்வதன் மூலம், அந்தக் கும்பல் பல கோடி ரூபாய் சம்பாதித்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை கும்பல் அளித்த தகவலையடுத்து, பல முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த பலரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழி நடிகர், நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தப் போவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் பிரச்சனை பெரியளவில் பேசப்பட்டது. நடிகை சார்மி, இயக்குநர் பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலரிடம் இதுபற்றி விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.