‘சூரரைப் போற்று’ வெளியிட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்த நடிகர் சூர்யா முதல்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
‘சூரரைப் போற்று’
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஷாக்கி ஷாரூப், சம்பத், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன.
சூர்யா விளக்கம்
இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட உள்ளதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது காலம் அனுமதிக்காத காரணத்தால், படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ‘அமேசான் பிரைம் வீடியோ’ மூலம் இணையம் வழியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். மேலும் ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் நடிகர் சூர்யா கூறியிருந்தார். நடிகர் சூர்யாவின் OTT ரிலீஸ் முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிதியுதவி
இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து முதல்கட்டமாக ரூ.1.5 கோடி இன்று வழங்கப்பட்டது. திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்ஸி’க்கு ரூ.80 லட்சமும், அதன் அங்கமான இயக்குநர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான ரூ.30 லட்சத்துக்கான காசோலையை சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டார். அதேபோல், தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட ரூ.20 லட்சத்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.