சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படுமா என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
படப்பிடிப்புகள் ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சினிமாத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், தியேட்டர்களும் மூடப்பட்டதால் திரைத்துறையைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வந்தனர். இதனிடையே, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து, அதுதொடர்பான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு, தொலைக்காட்சிகளில் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளித்திரை சார்ந்த எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
தியேட்டர்கள் திறக்கப்படுமா?
இந்த நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, தியேட்டர்கள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகம் முழுவதும் படிப்படியாக சில நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து செப்டம்பர் 1ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.