கேரள மாநிலம் கோழிக்கோடில் நடந்த விமான விபத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோர விபத்து
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு கடந்த மாதம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்தது. கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொழுது, எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்தில் சிக்கி, விமானம் இரண்டாக உடைந்து அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.
படமாகும் விபத்து
எல்லோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய கேரள விமான விபத்தை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இயக்குநர் மாயா இப்படத்தை இயக்க, மஜீத் மரஞ்சேரி கதை, திரைக்கதை எழுதுகிறார். இப்படத்திற்கு “கேலிகட் எக்ஸ்பிரஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் மாயா கூறுகையில், உலகில் உள்ள மிகவும் சிக்கலான விமான நிலையங்களில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதனை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு மாயா தெரிவித்தார்.