தனக்கு வரும் கணவர் உண்மையாக இருக்க வேண்டுமெனவும், தனது பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்பவராக இருக்க வேன்டுமெனவும் நடிகை நிவேதா தாமஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 
குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் ‘வெறுத்தே ஒரு பார்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். ‘குருவி’ என்ற தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மத்திய வேனல், பிரணயம், சாப குரிஷ் என்று தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த நிவேதா, போராளி என்ற தமிழ் படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். மலையாளம் தனது தாய் மொழி என்பதால், அதில் அதிக படங்கள் நடித்து வந்தார். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். பிறகு கமலஹாசனுடன் பாபநாசம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார். உலக நாயகனின் மகளாக நடித்த நிவேதா தாமஸுக்கு, சூப்பர்ஸ்டாரின் மகளாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்து அவரது ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்தார். தமிழ், மலையாளம் என்று மட்டும் நடித்துக் கொண்டிருந்த நிவேதா தாமஸ், ‘ஜென்டில்மேன்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் நின்னுக்கோரி, ஜெய் லவா குசா, ஜூலியட் லவ்வர் ஆஃப் இடியட், 118 போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது 4 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
உண்மையாக இருக்க வேண்டும்
முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நேரம் வந்தால் தானாகவே அனைத்தும் அமையும், அதுபோல் நான் எனக்கான நேரம் வரும் போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இப்பொழுது காதலிக்கவும் நேரமில்லை, திருமணம் பற்றி யோசிக்கவும் நேரமில்லை. முழுமையாக எனது நடப்பில் நான் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், எதிர்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கிறேன். திருமண வாழ்க்கையும், கணவரும் எப்படி இருக்க வேண்டும் என்று கனவுகள் மட்டும் இருக்கின்றது. எனக்கு வரவேண்டிய கணவர் உண்மையாக இருக்க வேண்டும். எனது பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்பவராகவும், என்னோடு வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக பகிர்ந்து வாழ விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.















































