சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி கடைகள் மூடப்பட்டு, பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதையடுத்து, கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன.
டாஸ்மாக் ஓபன்
ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் அரசின் உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்றும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.