இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே ஒரு பாடமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது என்றும் வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளோம் என்றும் கூறினார். உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் எனக் கூறிய பிரதமர், இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என பல வழிகளில் இந்தியா முன்னேறி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
நிச்சயம் வெல்வோம்
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது என்றும் கூறினார். பன்முகத்தன்மையே நமது பலம் எனவும் இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடமாக இருப்பதாகவும் பெருமிதம் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.