டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும், தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
அமெரிக்காவிலும் தடை
தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ்க்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிடவேண்டும் அல்லது தங்கள் நாட்டில் செயலிக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார். இதனால் மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கிய டிக்டாக்கின் தாய் அமைப்பான பைட்டான்ஸ் நிறுவனம், டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் விற்பதற்கு முடிவு செய்தது.
டுவிட்டர் முயற்சி
இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த முயற்சியில் டுவிட்டர் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.