கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கனமழை
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கேரளாவில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா பகுதியில் கனமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு, 17 பேர் பலி
இதற்கிடையே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 65க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பகுதியில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும், மழைநீர் தேங்கி இருப்பதாலும் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தொடர்மழையால் பெரியவாரை பகுதியில் இருந்த ஆற்றுப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் மழையும், காற்றும், காட்டாற்று வெள்ளமும் செல்வதால் அங்கு செல்வதில் மேலும் சில மீட்புப் படையினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.