பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்க மும்பை வந்த பாட்னா போலீஸ் அதிகாரியை சுகாதாரத்துறையினர் வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியா மீது புகார்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை மற்றும் பாட்னா என இரு மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார். மேலும் ரியா சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள பாட்னா போலீசார், இந்த வழக்கு விசாரணைக்காக மும்பையில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர். சுஷாந்த் மரண வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தம்
சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாட்னா நகர காவல் கண்காணிப்பாளர் வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு நேற்று மும்பை வந்தடைந்தது. இவர்கள் சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்களை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாக கையில் முத்திரையும் குத்தியுள்ளனர். இதனால் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.