வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸில் இருந்து 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருக்கழுகுன்றத்தில் 4 செ.மீ. மழையும், காட்பாடியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் 2 செ.மீ. மழையும், வேலூர், விரிஞ்சிபுரம், பொன்னை அணை, அம்முடி, ஊத்துக்குளி, பர்லியாறு பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.