இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சூர்யாவிற்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘நேருக்கு நேர்’ சூர்யா

கடந்த 1997 ஆம் ஆண்டு ‘நேருக்கு’ நேர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. இந்தக் கதாபாத்திரத்தை முதன்முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. இதன்பின் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. இதனால் அப்படத்தில் சூர்யா நடித்தார். முதல் படத்தில் அதுவும் தளபதி விஜய்யுடன் நடித்து அசத்தினார் சூர்யா. இதனையடுத்து பல படங்களில் நடிக்க துவங்கிய சூர்யாவிற்கு, ஆரம்பத்தில் ஹிட் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. பூவேல்லாம் கேட்டுப்பார் படத்தில் மீண்டும் தனது முதல் பட இயக்குநர் வசந்த் இயக்கத்தில் நடித்தார். இதில் தான் முதன்முதலாக நடிகை மற்றும் காதல் மனைவி ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதில் இடம்பெற்ற பாடல்களுக்காகவே பலர் இப்படத்தை பார்த்தனர். சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல படங்கள் அவரது கேரியரில் கம்பேக்காக அமைந்திருந்தது. 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கிய ‘நந்தா’ திரைப்படம் சூர்யாவின் திரைப்பயனத்தை திருப்பிப் போட்டது. இன்றுவரை அவரது திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படமாக அப்படம் திகழ்ந்து வருகிறது. மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார் சூர்யா. இதுவும் அவரது நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

ரொமேன்டிக் ஹீரோ

சூர்யாவை ரொமேன்டிக் ஹீரோவாக மாற்றியதில் முக்கிய பங்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை சேரும். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘காக்க காக்க’. இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, சூர்யாவின் கேரியரில் ஒரு பிளாக் பஸ்டராக அமைந்தது. ஓரு போலீஸ் என்றால் அன்புச்செல்வன் போல தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அப்படம். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த சூர்யா, பேரழகன் படத்தில் நம்மை ரசித்து ரசித்து சிரிக்க வைத்தார். உடலில் ஊனம் என்றாலும், அந்த சின்னா கதாபாத்திரத்தின் நம்பிக்கை ரசிகர்களை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஏழாம் அறிவு, 24, என்ஜிகே ஆகிய திரைப்படங்கள் அடங்கும்.

மிரண்டு போன பாலிவுட் நடிகர்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘கஜினி’ படத்தில், சூர்யா நடிப்பை பார்த்து பாலிவுட் நடிகர்களே மிரண்டு போயினர். கஜினி படம் மூலம் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்கு சென்றார் சூர்யா. கிறிஸ்டோபர் நோலனின் படமான “மொமெண்ட்டோ” படத்தை மையமாக வைத்து வந்த படம் என்றாலும், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அயன், ஆதவன் என கமர்ஷியல் சக்சஸாக நடித்துக் கொண்டிருந்த சூர்யாவை, மீண்டும் காக்கி சட்டை போட வைத்தார் இயக்குநர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான சிங்கம் படம் இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அன்புச்செல்வனுக்கு பிறகு துரை சிங்கத்தை தான் அதிகம் விரும்பினர் ரசிகர்கள். மீண்டும் முருகதாஸ் உடன் கூட்டணி சேர்ந்து உருவாக்கப்பட்ட ஏழாம் அறிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கொரோனா வைரஸ் பிரச்சனை சமயத்தில் அதிகம் பேசப்பட்டது ஏழாம் அறிவு படம்தான்.

வாழ்த்து மழை

சூர்யா தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்காவிட்டாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைத்திலும் அவரது ஈடுபாடு தெரியும். தற்போது சூர்யா நடிப்பில் சுதா கோங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இத்திரைப்படம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது. ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தினாலும், படத்தை திரையில் பார்க்க சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவுக்கு ரசிகர்களும், திரைத்துறை நண்பர்களும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். #NadippinNayagan, #HappyBirthdaySuriya போன்ற ஹேஷ்டேக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here