திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோயிலில் பக்தர்களுக்கான சுவாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆந்திர அரசு பரிசீலித்து வருகிறது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டு, சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், ஜூன் 10ம் தேதி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோயிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து மனமுருக வழிபட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக விலகலை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஜீயருக்கு கொரோனா
இதனிடையே, ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர பரிசீலனை
பெரிய ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், திருமலையில் அவர் தங்கி இருந்த மடத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் ஆந்திர அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது அர்ச்சகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், எனவே சில நாட்களுக்கு பக்தர்களுக்கான சுவாமி தரிசனத்தை ரத்து செய்யலாம் எனவும் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கான சுவாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? அல்லது தொடரலாமா? என்பது பற்றி ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.