பெரிய ஹீரோக்கள் தான் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று நடிகை வரலட்சுமி கூறியிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிக்கும் நடிகை
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கேர் நடத்தும் நடிப்புப் பள்ளியில் சேர்ந்து நடிப்புக்கான கலையை பயின்றார். இதன்பின் சிம்புவுடன் போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்படம் அவருக்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தது, அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன்பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வரலட்சுமி வென்றார்.
வில்லி
பின்னர் பல படங்களில் நடித்த வரலட்சுமி, சண்டக்கோழி, சர்கார் படங்களில் வில்லி கேரக்டரில் நடித்தார். இதில் அவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. குறைந்த காலத்திற்குள் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள வரலட்சுமி, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது கூட தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவான ரவி தேஜா நடித்து வரும் கிராக் திரைப்படத்திலும் அவர் வில்லியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
திரையுலகில் சலசலப்பு
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வரலட்சுமி, தான் நடித்துள்ள டேனி திரைப்படம் கிரைம் திரில்லர் கதை என்றும் இதில் தான் ஒரு போலீஸ் அதிகாரயாக நடிப்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால், இப்படம் OTT தளத்தில் வெளியாகிறது. தியேட்டர் அனுபவத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். கொரோனா வைரஸ் பிரச்சனையால் சம்பளத்தை குறைப்பீர்களா என்று தன்னிடம் பலர் கேட்கின்றனர். இந்த கேள்வியை பெரிய ஹீரோக்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் தான் சம்பளத்தை குறைக்க வேண்டும். நான் ஏற்கனவே சம்பளத்தை குறைத்துதான் வாங்கி கொண்டு இருக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி கூறினார். வரலட்சுமியின் இந்தப் பேச்சு தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.