கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் ஒரு வருட காலத்திற்கு திறக்கப்பட மாட்டாது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அனைத்தும் முடங்கியது
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து தொழில்களும் முடங்கிப் போயின. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டதால், வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், வருமான ரீதியாகவும் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி, வீட்டில் இருந்தபடியே வேலை என்ற புதிய சூழலுக்கு மக்கள் மாறிவிட்டனர். சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதனால், பட வேலைகள் முடங்கிக் கிடக்கின்றன. முழுமையாக முடிக்கப்பட்ட திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட்ட முடியாமல் காத்துக் கொண்டிருக்க, தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.
ஓடிடியா? தியேட்டரா?
அணைத்துப் பிரச்சனைகளையும் தாண்டி பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்கள் OTT தளங்களில் வெளியாகி வருகிறது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், அமிதாபச்சன் நடித்த குலாபோ சிதாபோ போன்ற திரைப்படங்கள் வரிசையாக OTT தளத்தில் வெளியாகின. என்னதான் வீட்டிலிருந்தபடியே புதுப்படங்களை டிவியில் பார்த்தாலும், தியேட்டர்களில் சென்று பார்ப்பது ஒரு தனி சுகம் தான். OTTயில் ரிலீசான படத்தை பார்த்தவர்களிடம் விமர்சனங்களை கேட்டால், ரசிகர்களின் ஆரவாரத்தை இந்தப் படங்கள் இழந்துவிட்டதாக கூறுகின்றனர். OTTயில் ரிலீஸான படங்கள் அனைத்தும் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்கு நோ தியேட்டர்
இது ஒரு பக்கமிருக்க, தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து பிரபல இயக்குநரான சேகர் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “தியேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஆவது திறக்கப்பட போவதில்லை. முதல் வார பிஸ்னஸ் நூறு கோடி போன்ற விஷயங்கள் இனி இழந்துவிடும். அதனால், ஸ்டார் சிஸ்டம் மறையப் போகிறது. சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் இப்போது இருக்கும் OTT தளங்களுக்கு சென்று படங்களை வெளியிட வேண்டி இருக்கும் அல்லது அவர்களாகவே சுயமாக ஆப் ஒன்றை உருவாக்கி அதில் தான் நடித்த படங்களை வெளியிட வேண்டி இருக்கும். டெக்னாலஜி மிகவும் எளிமையாகிவிட்டது. இவ்வாறு சேகர் கபூர் கூறியிருக்கிறார். பல பேரின் கருத்துக்கள் OTT பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் என்னவோ தங்களது கனவு நாயகனின் படங்களை தியேட்டர்களில் சென்று பார்ப்பதையே விரும்புகின்றனர்.