நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்ததில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என காமெடி நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
திரையுலகின் காமெடியன்கள்
தமிழ் சினிமாவில் கதை, பாடல்கள், இசை, வசனம், சண்டை என அனைத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேஅளவு முக்கியத்துவம் காமெடிக்கும், அதில் நடிக்கும் காமெடியன்களுக்கும் உண்டு. 1980களில் நாகேஷ் தனது அசாத்திய நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைப்பார். அதன்பின் 90களில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இணைந்து பல படங்களில் நடித்தனர். இவர்கள் இருவரும் செய்த வாழைப்பழக் காமெடி இன்றுவரை ரசிக்க வைக்கிறது. நடிகர் ராஜ்கிரணால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டார் வடிவேலு. தனியாக காமெடிகளில் அறிமுகமான வடிவேலு, பின்னாளில் கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து படங்களில் நடிக்க துவங்கினார். அப்போது இவர்கள் மூவரின் காமெடியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அதனைதொடர்ந்து வடிவேலு தனியாக தனது ரூட்டை மாற்றினார். பின்னர் பல படங்களில் காமெடிகளில் கலக்க ஆரம்பித்தார்.
கால்ஷீட் இல்லை
ஒரு காலத்தில் நடிகர்கள் கால்ஷீட் பெறுவதற்கு முன் காமெடியன்களான கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் கால்ஷீட்களை பெறுவர். அந்த அளவிற்கு படு பிசியாக நடித்து வந்தனர் இருவரும். இதே நிலைதான் நடிகர் வடிவேலுக்கும் இருந்தது. வடிவேலு நடித்தால் போதும் அந்த படங்கள் ஹிட் ஆன வரலாறு உண்டு மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த திரைப்படங்கள் இவரது காமெடிக்காகவே ஹிட் ஆன படங்களும் உண்டு.
காமெடி கிங்
வடிவேலுடைய திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களுள் ஒன்றுதான் ‘வெற்றிகொடி கட்டு’. முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா என பலர் நடித்த இப்படத்தை சேரன் இயக்கினார். இப்படம் நகைச்சுவைக்காகவே பல நாட்கள் ஓடியது. அதுவும் “துபாய் டிரஸ் ஒரு முறை உபயோகப்படுத்தியதை மறுமுறை பயன்படுத்துவது இல்லை” என வடிவேலு காமெடிகளில் ரவுண்டு கட்டி அடித்த திரைப்படம் தான் இது. இதில் வடிவேலுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருப்பார் பெஞ்சமின். சமீபத்தில் பல சேனல்களுக்கு பேட்டி அளித்த பெஞ்சமின், வடிவேலு குறித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் நடிகர் பெஞ்சமினை பார்த்து தன் படத்தில் நடிக்க வரச்சொல்லி இருக்கிறார். இவரும் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட 18 நாட்களாக பெஞ்சமினை ஒரு புளியமரத்தின் அடியில் நாற்காலியை போட்டு உட்கார வைத்துள்ளனர். காரணம் கேட்டதற்கு வடிவேலு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரேநாளில் எடுக்கப்பட வேண்டியுள்ளது, அதனால் அவர் வரும்வரை காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர்.
மனக்கசப்பு
ஒரு வழியாக வடிவேலு வந்தவுடன் ஷூட்டிங் ஆரம்பித்தனர். இவர்களுக்கு இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்ட பொழுது வடிவேலு பெஞ்சமினை நடிக்கவிடாமல் தனது முக பாவனையால் கிண்டல் செய்ததாகவும், அதனால் பெஞ்சமின் வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சி சுமார் 5 ரீல்க்கும் மேலாக சென்றதாகவும் கூறியுள்ளார். கடைசியாக நடிகர் பார்த்திபன் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துவிட்டு, நான் அந்த காட்சிகளை நடித்து முடித்தேன் என்றும் வடிவேலுவை திட்டும் அந்த காட்சிகள் எடுக்கப்பட்ட பொழுது வடிவேலு அங்கு இல்லை என்றும் அந்த பேட்டியில் நடிகர் பெஞ்சமின் கூறியுள்ளார்.