பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், கன்னட நடிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தொடரும் மரணம்
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்கள் ஒவ்வொருத்தராக மரணிப்பது சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்து சரியாக ஒரு மாதம் ஆனதை தொடர்ந்து அவர் வீட்டில் அதற்கான பூஜைகள் நடத்தப்பட்டன. சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்து ஒரு மாதம் ஆகிவிட்டதா? என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தற்கொலை அல்ல கொலை தான் என பலரும் பலவிதமாக பேசி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சீரியல் நடிகரான இவர், தனது சொந்த முயற்சியால் யாருடைய பின்புலமும் இல்லாமல் சினிமாவில் ஜெயித்து ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கன்னட நடிகரான சுஷீல் கவுடா என்பவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளம் வயதில் தற்கொலை
30 வயதே ஆன சுஷீல் கவுடா கர்நாடகாவின் மண்டியா பகுதியில் பிறந்தார். பிட்னஸ் டிரெய்னராக பணியாற்றி வந்த இவர், உடலை பேணிக்காப்பது குறித்து பல ஆலோசனைகளை சொல்லி வருவார். 2015ஆம் ஆண்டு “அந்தப்புரா” என்ற டிவி சீரியலில் அறிமுகமான சுஷீல், அதன்மூலம் பெருமளவில் பிரபலமானார். இவரின் நடிப்பை பார்த்த இயக்குநர்கள் பலர், திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். சமீபத்தில் “சலாக” எனும் திரைப்படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் இவர் நடையும், உடையும், உயரமும், கட்டுக்கோப்பான உடலும் இருப்பதால் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்தினார். கொரோனா பாதிப்பு காரணமாக தனது சொந்த ஊரான மாண்டியாவில் மூன்று மாதமாக சுஷீல் தங்கி வந்தார். கடந்த 7ஆம் தேதி நண்பர் வீட்டுக்கு சென்ற அவர், அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த திரைப் பிரபலங்களும், குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். 
மர்மமான தற்கொலை
சுஷீல் கவுடா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற எந்த ஒரு காரணமும் இதுவரையில் தெரியவில்லை. சீரியலில் இருந்து சினிமாவிற்குள் வந்த சுஷாந்த் சிங்கும், சுஷீல் கவுடாவும் சிறு வயதிலேயே இப்படி தவறான முடிவை எடுத்துவிட்டனர் என்று சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை கூறுகின்றனர். சினிமா பின்புலம் உள்ளவர்கள் அனைவரும் பட வாய்ப்புகளை தட்டி பறித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் சிங், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அந்த வகையில் இவரும் தற்கொலை செய்துகொண்டது சினிமா பின்புல அரசியலா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்று பல வகையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.















































