மதுரை மாவட்டத்தில் மட்டும் ஜூலை 12ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய – மாநில அரசுகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் நீட்டிப்பு
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கினை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஜூலை 12ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேண்டுகோள்
மேலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுபாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான் இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும் நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி ஆலோசனைகள், சிகிச்சைகளை பெற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகளுடன் தளர்வு
இதனிடையே, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும் டீக்கடைகளில் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை ஆன்லைன் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.