கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வருவாயின்றி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இதன்காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ஐதராபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் சோதனை வெற்றி
COVAXIN என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து செய்யப்பட்ட பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த மாதம் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய பாரத் பயோடெக் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா, முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருப்பதாகவும், சோதனை முடிவுகள் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுவதாகவும் தெரிவித்தார்.