இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி
இளம் வயதில் தோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான். பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்த தோனியை, ஒரு கிரிக்கெட் போட்டியின் போது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் அவரது நண்பர்கள் கீப்பிங் செய்ய சொன்னார்கள். அப்போது கிரிக்கெட் விளையாடிய தோனிக்கு கால்பந்தை விட கிரிக்கெட் சிறப்பான விளையாட்டாக தோன்றியது. அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.
பிறந்தநாள் டிபி வெளியீடு
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனியின் 39வது பிறந்த நாள் ஜூலை மாதம் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தோனியின் பிறந்தநாள் என்றாலே பத்து நாட்களுக்கு முன்பாக அவருக்கு காமன் டிபி வெளியிடுவதை அவரது ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், இந்த வருடம் எந்த மாதிரியான காமன் டிபி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், சற்று நேரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமான காமன் டிபி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைவரும் காமன் டிபியை வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தோனியின் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் இந்த காமன் டிபியை டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இப்போதிலிருந்தே மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
ரசிகர்கள் ஏமாற்றம்
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு எந்தப் போட்டிகளிலும் தோனி பங்கு கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் அவரைக் காண ஆவலுடன் இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் போட்டிகளும் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டன. இதனால் தோனியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தோனியின் மனைவி அவர் குறித்த செய்திகளையும், வீடியோக்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றன.
விவசாயத்தில் இறங்கிய தோனி
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விவசாயம் செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தோனி டிராக்டரில் அவரது பண்ணை வீட்டில் உழவு செய்து கொண்டிருக்கிறார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.