எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்களை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என நடிகை மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார்.
இளம் நடிகை
தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர், தற்போது களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பது குறித்த சில கருத்துக்களை கூறியுள்ளார்.

உடன்பாடு இல்லை
இதுகுறித்து மஞ்சிமா மோகன் பேசுகையில்; எந்த ஒரு திரைப்படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்களை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள். பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்கள் பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. கதையின் மைய புள்ளியாக பெண்கள் இருந்தாலோ அல்லது ஹீரோ என்று ஒருவர் இல்லாவிட்டாலோ அது பெண்களை மையப்படுத்திய படம் அல்ல.
சம பங்கு உண்டு
நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவும் இல்லை என்றால் அந்தப் படம் எப்படி முழுமை பெற்றிருக்கும். ஹீரோயின் மட்டுமே நடித்தால் அந்த படம் பெண்களை பெருமைப்படுத்தும் படமாகி விடாது. ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது. இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.















































