நான் சினிமாவுக்கு வர விஜய் தான் முக்கிய காரணம் என நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாழ்த்து மழை
நடிகர் விஜய் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர் குறித்த பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துக்கூறி வாழ்த்தினர். ஒரு சிலர் விஜய்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் வாழ்த்து கூறினர்.
விஜய் தான் காரணம்
அந்த வகையில், நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அண்ணன் தளபதி’ என விஜய்யை குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், விஜய்யை பொறுத்தவரை ஒரு நல்ல நண்பர் என்றும், இயல்பான அழகான நட்புக்குரியவர் எனவும் உதயநிதி புகழ்ந்துள்ளார். விஜய் எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர் எனவும் உதயநிதி தெரிவித்திருக்கிறார். தான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி, ரெட் கெயின்ட் மூவிஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை விநியோகஸ்தராக கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படமாகும்.
கலக்கல் காமெடி
ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். அப்படத்தில் உதயநிதியும் சந்தானமும் செய்த கலக்கல் காமெடியால், முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைதொடர்ந்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கண்ணே கலைமானே’, ‘மனிதன்’, ‘நண்பேன்டா’, ‘கெத்து’ போன்ற படங்களில் நடத்தார். தற்போது அவரது நடிப்பில் இருக்கும் `கண்ணே கலைமானே’ படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மு. மாறன் இயக்கும் ‘கண்ணை நம்பாதே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.