ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ அவரின் தந்தை தான். அவரை ரோல்மாடலாக வைத்துதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். அதேபோல் அனைவரின் தந்தையும், தான் கற்றதை தன் மகனுக்கும் சொல்லித் தருவார். இந்த உலகத்தையே வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

முதல் ஹீரோ

தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணிப்பவர் அவர். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினம்

எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல் தான். 1909ல் அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ‘சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்’ என்ற இளம் பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடி உள்ளார். இவரது தாய், தனது ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தாயின் மறைவுக்கு பின் தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்ட சொரானா, அதனை உணர்ந்த இந்த நாளை தந்தையார் தினமாக கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு தூண்டியுள்ளது. இதன்படி 1910ல் இருந்து அமெரிக்காவில் இத்தினத்தை கொண்டாடினாலும், இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது.

குதூகல கொண்டாட்டம்

1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார். மேலும் இந்த நாளை விடுமுறை நாளாக சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார். 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவித்தார். சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஜுன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அனைவராலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது. தந்தையர் தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

நாம் செய்யும் கைமாறு?

நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைம்மாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார். தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், அந்த குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.

தந்தையை மதியுங்கள்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை. அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி அனுப்புங்கள். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here