வெப்பசலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியும், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸும் இருக்கும்.
நீலகிரியில் மழை
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாளா (நீலகிரி), பொன்னமராவதியில் (புதுக்கோட்டை) தலா 3 செ.மீ மழையும், ஓமலூர் (சேலம்) 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜூன் 19 முதல் ஜூன் 23 ந் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு ஆந்திர கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.