சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
சிறையில் சசிகலா
ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எப்போது விடுதலை?
இந்த நிலையில், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார்.
சிறைத்துறை பதில்
அதில், சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை. இவ்வாறு சூப்பிரண்டு லதா அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.