வெறுப்புணர்வை வளர்ப்பவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கப்பட வேண்டுமென பிரபல நடிகை பார்வதி கடுமையாக சாடியுள்ளார்.
பழத்தில் வெடி
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் இங்குள்ள கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அப்போது விஷமிகள் சிலர் அண்ணாசி பழத்துக்குள் வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். இதனை அறியாத யானை, அண்ணாசி பழத்தை உண்ட போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும் நாக்குப் பகுதி கடுமையாக சேதமடைந்தன.
பரிதாபமாக உயிரிழந்த யானை
வலியால் துடிதுடித்த யானை உணவுகூட உண்ண முடியாமல் தவித்து வந்தது. பின்னர் வெள்ளியாறின் தண்ணீரில் நின்றபடி தனது உயிரைவிட்டது. யானை தண்ணீரில் நின்றபடி உயிர்விடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரச் செயலுக்கு திரையுலகினர் உள்பட பலர் தங்களது கண்டனத்தை பதவி செய்து வருகின்றனர்.
மேனகா காந்தி குற்றச்சாட்டு
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், மலப்புரம் பகுதி குற்றச்செயல்களுக்கு பெயர் போனது, முக்கியமாக விலங்குகளுக்கு எதிராக. விலங்குகளை கொள்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து இதைச் செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
பார்வதி கண்டனம்
இதையடுத்து மேனகா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவருடைய டுவிட்க்கு பதில் டுவிட் போட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் மலையாள நடிகை பார்வதி. டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது; வெடி பொருட்கள் கொண்ட பொறியில் மிருகங்கள் சிக்கி இரையாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தண்டனைக்குரிய குற்றம். நடந்ததை கேள்விப்படும் போது வேதனை அளிக்கிறது.
வெட்கப்பட வேண்டும்
சம்பவம் நடந்த மாவட்டத்தை வைத்து வெறுப்புணர்வை வளர்ப்பவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கப்பட வேண்டும். நீங்களாக ஒன்றை யூகித்து இன்னும் எவ்வளவுதான் வெறுப்பை வளர்ப்பீர்கள்?.இதை இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு சந்தர்ப்பமாக எப்படி மாற்றுகிறீர்கள்?. கேரள சமூகம் எப்போதும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழக் கூடியது. இவ்வாறு நடிகை பார்வதி கூறியுள்ளார்.