ஆணாதிக்கம் உள்ள திரைத்துறையில் நயன்தாரா தான் இன்னமும் நம்பர் ஒன் ஹீரோயினாக உள்ளார் என்று நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
அம்மனாக நயன்தாரா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். முதன்முறையாக அம்மனாக நடிப்பதால், படப்பிடிப்பு நடந்த நாட்களில் நயன்தாரா விரதம் இருந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
வழிபாடு
மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில், கோவிலாக சென்றார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 
நம்பர் ஒன் ஹீரோயின்
இந்நிலையில் நயன்தாரா பற்றி ஆர்.ஜே. பாலாஜி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நான் இதுவரை வேலை செய்த நடிகைகளிலேயே நயன்தாரா தான் ரொம்ப டிசிப்லினானவர். அதனால் தான் ஆணாதிக்கம் மிக்க இந்த சினிமா துறையில் அவர் இன்னும் நம்பர் ஒன் ஹீரோயினாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸ்
ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் முதல் படமாக மூக்குத்தி அம்மன் இருக்கும் என்று ஆர்.ஜே. பாலாஜி நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். பாலாஜி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.















































